Wednesday, May 4

சிறுகதை



அந்தமான் தமிழர் சங்கம் இலக்கிய மன்றம் வெளியிட்ட கலை இலக்கிய மலர்  " தேன் மழை" யில் நான் எழுதியது.
அக்கரைப்பச்சை .........................

குக்கர் விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்த அகல்யா வெளியில் ஸ்கூட்டர்  சத்தம் கேட்டு வேகமாக வந்து பார்த்தாள். எதிர் வீட்டில் வசிக்கும் சுகந்தி கணவனுடன் வேலைக்குக் கிளம்பி போய்க்கொண்டிருந்தாள், தினமும் அவள் போவதைப் பார்த்துவிட்டு அவள்  ஆழ்ந்த பெருமூச்சொன்றை  விட்டுக் கொள்வது வாடிக்கையாகிப் போனது. அன்றும் அவளைப் பார்த்து விட்டு தனக்குதானே புலம்பிக்கொண்டாள்.  நாமும்தான் படித்து விட்டு இப்படி வீடு வீடு என்று வீடே கதியென்று கிடக்கிறோம் என்று தன்னைத்தானே நொந்து கொண்டவள் , இன்று எப்படியாவது தான் வேலைக்குப் போவது பற்றி கணவனிடம் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும்  என எண்ணிக்கொண்டாள்.

மாலையில் அவள் கணவன் சுரேஷ் திரும்பியதும் பலகாரம் எடுத்து வைத்து, சூடாக காபி போட்டு எடுத்துக் கொண்டு அவனருகில் வந்து அமர்ந்தாள். அவளின் இச்செயலைக் கண்டு சுரேஷுக்கு ஆச்சர்யமாக இருந்தது.  இருக்காதா  பின்னே! என்றுமில்லாமல்  அவன் வந்து கேட்பதற்கு முன்பாகவே  அவ்வளவும் நடக்கின்றது என்றால் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நினைத்து, நாமாக எதுவும் கேட்க வேண்டாம், அவளாகவே சொல்லட்டும் என்று காத்திருந்தான். 

அகல்யா மெதுவாக என்னங்க.... நான் ஒண்ணு சொல்வேன்! கோவிச்சுக்க மாட்டிங்களே! என பீடிகையோடு  ஆரம்பித்தாள்.  முதலில் என்ன விஷயம் என்று  சொல் என்றதும், அவள் நான் தான் படிச்சிருக்கேன்ல  ஏன் வீணா வீட்டில் பொழுதைப் போக்கணும்?   ஏதாவது வேலைக்குப் போனால் எனக்கும் நேரத்தை  பயனுள்ளதாகவும் மேலும் வருமானத்தை குழந்தைகள் பெயரில் சேமிக்கலாமே  எனக்கூறினாள். இதைக்கேட்டதும்  சுரேஷ், நீயும் பலமுறை சொல்லிவிட்டாய். இனிமேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, முயற்சி செய், கிடைத்தால் போகலாம் எனக்கூறிவிட்டு அன்றைய செய்திதாளில் மூழ்கிவிட்டான்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுகந்தி வீட்டில் இருப்பாள், அவளிடம் இந்த விஷயத்தைக் சொல்லி மகிழ்வதற்காக சென்ற அகல்யா அங்கே நடந்த சம்பாசனையில் திகைத்து நின்றாள்!. 

அங்கே! சுகந்தி தன் கணவனிடம், ஏங்க நான் ஒன்று சொல்லட்டுமா? எனக்கேட்டுவிட்டு, எனக்கு வேலைக்குப்போக இஷ்டம் இல்லைங்க என்றவளை ஏன் என்பது போல் பார்த்தான். அவசரம் அவசரமாக வீட்டு வேலைகளை செய்து, அலுவலகத்திற்கும்செல்வதால்,  குழந்தைகளையும், உங்களையும்  சரிவரக் கவனிக்கமுடியவில்லை. பள்ளியிலிருந்து குழந்தைகள் திரும்பியதும் யாரும் இல்லாதவர்கள் போல் பக்கத்து வீட்டிலோ அல்லது வாசலிலோ காத்துக் கிடப்பதைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது. தினமும் இதை நினைத்து என்மனம் எவ்வளவு வேதனைப்படுகிறது தெரியுமா? அனைத்தையும் நன்றாக யோசித்து தான் உங்களிடம் கேட்கிறேன். எதிர் வீட்டு அகல்யாவைப் பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. எனக்கும் அவள் மாதிரி குழந்தைகளையும், உங்களையும் நன்றாகப் பார்த்துக்கொள்ளவே ஆசை, அது வீட்டிலிருந்தால் தான் முடியும். படித்திருந்தால் கண்டிப்பாக வேல்லைக்குதான் போக வேண்டும் என்பது இல்லையே. வீட்டிலிருந்து குழந்தைகளுக்கு சொல்லிக்குடுக்க பயன்படுத்தலாம். நீங்கள் மட்டும் சரி என்று சொல்லுங்கள், நான் நாளைக்கே வேலையை விட்டு விடுகிறேன் என அவள் சொல்வதை கேட்ட அகல்யா அதிர்ந்து,  பின் தெளிந்தவளாய் வீட்டிற்குத் திரும்பிவிட்டாள்.

சுரேஷ் வெளியில் சென்று விட்டு திரும்பியதும் அகல்யா என்றுமில்லா மகிழ்ச்சியுடன் கணவனுக்கு காபி போட்டுக் கொடுத்தாள். அவளின் இனம் புரியாத மகிழ்ச்சியைக் கண்ட சுரேஷ், அகல்யா ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறாய் என்ன விஷயம்? ஏதேனும் வேலை கிடைத்து விட்டதா? எனக் கேட்டான். அவள் வேகமாக இல்லைங்க நான் வேலைக்குப் போகப்போவதில்லை, உங்களையும், குழந்தைகளையும் வீட்டிலிருந்தே கவனித்துக்கொள்கிறேன் எனப் பெருமையுடன் கூறினாள். என்ன நடந்தது? இவளின் மன மாற்றத்திற்கு என்ன காரணம்? எனப் புரியாமல் சுரேஷ் " ங்கே " என்று விழித்துக் கொண்டிருந்தான்!.

பின் குறிப்பு:
( இக்கதை அந்தமான் தமிழர் சங்கத்தின் கலை-இலக்கிய மலர் "தேன்மழை" யில் வெளி வந்துள்ளது.)

1 comment:

Unknown said...

Tamil Song Lyrics -
http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_7858.html

Post a Comment